திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.33 திருஅன்பிலாலந்துறை
பண் - தக்கராகம்
கணைநீடெரி மாலர வம்வரை வில்லா
இணையாஎயில் மூன்றும் எரித்த இறைவர்
பிணைமாமயி லுங்குயில் சேர்மட அன்னம்
அணையும்பொழி லன்பி லாலந்துறை யாரே.
1
சடையார்சது ரன்முதி ராமதி சூடி
விடையார்கொடி யொன்றுடை யெந்தை விமலன்
கிடையாரொலி ஓத்தர வத்திசை கிள்ளை
அடையார்பொழில் அன்பி லாலந்துறை யாரே.
2
ஊரம்மர வஞ்சடை மேலுற வைத்துப்
பாரும்பலி கொண்டொலி பாடும் பரமர்
நீருண்கய லும்வயல் வாளை வராலோ
டாரும்புனல் அன்பி லாலந்துறை யாரே.
3
பிறையும்மர வும்முற வைத்த முடிமேல்
நறையுண்டெழு வன்னியு மன்னு சடையார்
மறையும்பல வேதிய ரோத ஒலிசென்
றறையும்புனல் அன்பி லாலந்துறை யாரே.
4
நீடும்புனற் கங்கையுந் தங்க முடிமேல்
கூடும்மலை யாளொரு பாகம் அமர்ந்தார்
மாடும்முழ வம்மதி ரம்மட மாதர்
ஆடும்பதி அன்பி லாலந்துறை யாரே.
5
நீறார்திரு மேனிய ரூனமி லார்பால்
ஊறார்சுவை யாகிய உம்பர் பெருமான்
வேறாரகி லும்மிகு சந்தனம் உந்தி
ஆறார்வயல் அன்பி லாலந்துறை யாரே.
6
செடியார்தலை யிற்பலி கொண்டினி துண்ட
படியார்பர மன்பர மேட்டிதன் சீரைக்
கடியார்மல ரும்புனல் தூவிநின் றேத்தும்
அடியார்தொழும் அன்பி லாலந்துறை யாரே.
7
விடத்தார் திகழும்மிட றன்நட மாடி
படத்தாரர வம்விர வுஞ்சடை ஆதி
கொடித்தேரி லங் கைக்குலக் கோன்வரை யார
அடர்த்தாரருள் அன்பி லாலந்துறை யாரே.
8
வணங்கிம்மலர் மேலய னும்நெடு மாலும்
பிணங்கியறி கின்றிலர் மற்றும் பெருமை
சுணங்குமுகத் தம்முலை யாளொரு பாகம்
அணங்குந்திக ழன்பி லாலந்துறை யாரே.
9
தறியார்துகில் போர்த்துழல் வார்சமண் கையர்
நெறியாஉண ராநிலை கேடினர் நித்தல்
வெறியார்மலர் கொண்டடி வீழு மவரை
அறிவாரவர் அன்பி லாலந்துறை யாரே.
10
அரவார்புனல் அன்பி லாலந்துறை தன்மேல்
கரவாதவர் காழியுள் ஞானசம் பந்தன்
பரவார்தமிழ் பத்திசை பாடவல் லார்போய்
விரவாகுவர் வானிடை வீடெளிதாமே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com